ரஜத் குப்தா 1994 முதல் 2003 வரை மெக்கின்சி அண்ட் கோ என்ற ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தார். இந்தப் பதவியை வகித்த முதல் இந்தியர், ஒரே ஒரு இந்தியர் இவரே. 1971-ம் ஆண்டு, ஐஐடி தில்லியில் மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் பி.டெக் பட்டம் பெற்ற இவர், ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலிலிருந்து 1973-ல் எம்.பி.ஏ பட்டம் பெற்றார்.
மெக்கின்சி கன்சல்ட்டிங்கில் வேலைக்குச் சேர்வதையே பெருமையாக மாணவர்கள் மதிக்கும் காலகட்டம் அது. அதில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து கம்பெனி யின் நிர்வாக இயக்குனராக ஆனார். இந்தியர்களால் மட்டுமல்ல, தொழில் உலகில் அனைவராலும் மதிக்கப்பட்டார்.
மெக்கின்சியிலிருந்து 55 வயதில் வெளியேறியபின் இவருக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தன. கோல்ட்மன் சாக்ஸ், ப்ராக்டர் அண்ட் கேம்பிள், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போன்ற கம்பெனிகள், இவரை தங்கள் இயக்குனராக அவைக்கு அழைத்தன.
இவருடைய ஆலோசனைகளால் தம்முடைய நிறுவனம் வேகமாக முன்னேறும் என்று அவர்கள் நிஜமாகவே நினைத்தனர். இன்று ரஜத் குப்தா, மோசடிக் குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு, 12 ஆண்டுகள் வரை சிறையில் தள்ளப்படும் நிலைக்கு வந்துள்ளார்.
அப்படி என்னதான் தவறு செய்துவிட்டார் ரஜத் குப்தா?
இயக்குனர் அவையில் இருக்கும் நான்-எக்சிகியூட்டிவ் இயக்குனர் (Non Executive Director) தான் ரஜத் குப்தா. அவரால் கம்பெனியின் பணத்தை எந்த விதத்திலும் நேரடியாகக் கையாள முடியாது. பணம் திருடினார் என்பதல்ல அவர்மீதான குற்றச்சாட்டு. ஆனால் ரகசியத் தகவல்களை தன் நண்பர் ஒருவருக்குக் கசியவிட்டு அதன்மூலம் பங்குச்சந்தையில் உள்ள பல்லாயிரம் மக்களை ஏமாற்றி தானும் நண்பரும் லாபம் சம்பாதிக்க வழிவகை செய்தார் என்பதுதான் அவர்மீதான குற்றச்சாட்டு.
ரஜத் குப்தாவின் நண்பர், இலங்கையைச் சேர்ந்த ராஜ் ராஜரத்தினம் என்பவர். ராஜ், காலியான் ஹெட்ஜ் ஃபண்ட் என்ற நிறுவனத்தை நடத்திவந்தார். இந்த நிறுவனம் பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கி விற்று லாபம் சம்பாதிக்க முற்படும் ஒரு நிறுவனம். ரஜத் குப்தா கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்தில் இயக்குனராக இருந்தபோது தனக்குக் கிடைத்த இரண்டு முக்கியமான தகவல்களை ராஜரத்தினத்துக்குக் கொடுத்து அதன்மூலம் ராஜரத்தினம் லாபம் அடைந்துள்ளார் என்று நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளனர்.
கோல்ட்மன் சாக்ஸ் என்பது ஒரு நிதி நிறுவனம். 2008-ல் அமெரிக்க நிதி அமைப்புகள் பயங்கரமாக ஆட்டம் கண்டன. வீட்டுக் கடன் நிறுவனங்களில் நிகழ்ந்த சில குளறுபடிகள், மொத்த நிதி அமைப் பையே குலைத்துவிட்டன. லெஹ்மன் பிரதர்ஸ் என்ற பெரும் நிறுவனம் திவால் ஆனது. இந்தக் கட்டத்தில், கோல்ட்மன் சாக்ஸ் முதல் பலரும் எங்கிருந்தாவது நிதி முதலீட்டைப் பெறும் முயற்சியில் இருந்தனர். உலகின் மிக சாமர்த்தியமான முதலீட்டாளர் என்று பெயர் பெற்றுள்ள வாரன் பஃபட், கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய முடிவெடுத்தார். 23 செப்டெம்பர் 2008 அன்று நடந்த இயக்குனர் சந்திப்பில் இதனை கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொள்ள முடிவு செய்தது. ஆனால் இதனை வெளி உலகுக்கு வெளியிடவில்லை.
சந்திப்பிலிருந்து வெளியே வந்த ரஜத் குப்தா தன் நண்பர் ராஜரத்தினத்துக்குத் தொலைபேசியில் இந்தத் தகவலைத் தெரிவிக்க, ராஜ் கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்தின் பங்குகளை அன்று சந்தை முடிவதற்கு முன்னரே வாங்கிப் போட்டார். மறுநாள் பஃபட் செய்தி வெளியாக, கோல்ட்மன் பங்குகள் சரேலென மேலே ஏறின. ராஜுக்குப் பெரும் லாபம்.
அக்டோபர் 2008-ல், கோல்ட்மன் சாக்ஸ் தன் காலாண்டு வரவு செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யவேண்டிய நேரம். கோல்ட்மன் சாக்ஸ் பங்குச்சந்தைக்கு வந்தபின் அதுநாள் வரையில் நஷ்டம் அடைந்ததே இல்லை. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள், அந்தக் காலாண்டிலும் அப்படியேதான் இருக்கும் என்று நம்பினார்கள். ஆனால் அம்முறை நஷ்டம். இயக்குனர் அவை சந்திப்பு நடந்துகொண்டிருக்கும்போது இந்தத் தகவலை ரஜத் குப்தா ராஜுக்கு அனுப்பியுள்ளார். உடனேயே சந்தை முடிவதற்குள்ளாக ராஜ் தன் கையில் இருந்த கோல்ட்மன் சாக்ஸ் பங்குகளை விற்றுவிட்டார். மறுநாள் உண்மைத் தகவல் தெரிந்ததும் பங்குச்சந்தையில் கோல்ட்மன் சாக்ஸ் பெரும் வீழ்ச்சி அடைந்தது. ராஜ் மட்டும் நஷ்டத்திலிருந்து தப்பிவிட்டார்.
ராஜ் இதுபோன்ற சித்து விளையாட்டுகளில் ஈடுபடுகிறார் என்பதை மோப்பம் பிடித்திருந்த புலனாய்வு அமைப்பினர், அவருடைய தொலைபேசியை ஒட்டுக்கேட்க ஆரம்பித்தனர். கிடைத்த தகவலை அடிப்படையாகக் கொண்டு, ராஜ்மீது வழக்கு தொடுத்தனர். அவருக்கு பதினோரு ஆண்டுகள் சிறை தண்டனையும் வாங்கிக் கொடுத்தனர். ஆனால் அந்தச் சமயத்தில் ரஜத் குப்தாமீது எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை. அவரிடமிருந்துதான் தகவல் கசிந்திருக்கவேண்டும் என்று யூகித்த புலனாய்வுத் துறை, அவரைக் கடுமையாகக் கண்டித்தது. அவர்மீது அபராதம் விதிக்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.
ரஜத் குப்தா பேசாமல், அபராதம் கட்டியிருக்கலாம். மாறாக, நீதிமன்றம் சென்றார். தன்னை அவதூறு செய்கிறார்கள் என்றார். புலனாய்வுத் துறை பொறுமையாக மேற்கொண்டு சாட்சியங்களைச் சேகரித்தது. ரஜத் குப்தாமீது வலுவான வழக்கைப் பதிவு செய்தது. இன்று 12 ஆண்டுகள் சிறைவாசத்தை எதிர்நோக்கியிருக்கிறார் ரஜத் குப்தா.
தகவலை வெளியே சொல்வது ஒரு குற்றமா? அதற்குப்போய் 12 ஆண்டுகள் சிறையா என்று இந்தியர்கள் அதிசயப்படலாம். நம் நாட்டில் பெரும் மலையை முழுங்கி ஏப்பம் விட்டாலும் தண்டனை எல்லாம் கிடைக்காது. வழக்கு நடக்கவே பல ஆண்டுகள் ஆகும். ஆனால் அமெரிக்க நீதிமன்ற முறை வேறு. அங்கு வழக்குகள் விரைவாக நடக்கும். தவறு என்று கண்டறியப்பட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும். மேல்முறையீடு உண்டு, ஆனால் அதுவும் வேகமாக நடக்கும். ஒன்று தண்டனை, இல்லை விடுதலை. மிக விரைவாக.
ரஜத் குப்தா செய்தது மாபெரும் தவறு. நம்பிக்கை மோசடி மட்டுமல்ல, உள்தகவலை வைத்துக்கொண்டு பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்கும் ‘இன்சைடர் டிரேடிங்’ என்று சொல்லப்படும் குற்றம்.
ரஜத் குப்தாவின் நண்பர்கள் அவர் சார்பாக வாதாடுகிறார்கள். இது அபத்தமானது. குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டபிறகும் குற்றவாளி நல்லவர், வல்லவர் என்றெல்லாம் பேசுவது அசிங்கம். இந்தியாவிலும் நிச்சயமாக இன்சைடர் டிரேடிங் நடக்கிறது. ஆனால் இந்திய முறையில் செபி என்ற அமைப்பு, இந்தத் தவறு தெரியவரும்போது அதிகபட்சமாகக் கொஞ்சமாக அபராதம் போடும். உதாரணமாக, அனில் அம்பானியின் சில நிறுவனங்கள் இன்சைடர் டிரேடிங்கில் ஈடுபட்டதை செபி கண்டுபிடித்தது. அவர்களைச் செல்லமாகக் கடிந்துகொண்டு இயக்குனர்கள்மீது 25 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. அவ்வளவுதான்! அவர்கள் எத்தனை கோடி ரூபாய் லாபம் சம்பாதித்தார்களோ, எத்தனை அப்பாவி மக்களின் பணம் நஷ்டமானதோ. முகேஷ் அம்பானி மீதும் இன்சைடர் டிரேடிங் வழக்குகள் சில உள்ளன.
செபியிடம் தங்கியுள்ள இன்சைடர் டிரேடிங் வழக்குகளைச் சேர்த்தால், 50,000 கோடி ரூபாய்க்கும் மேலான மோசடிகள் என்று தெரிய வருகிறது. செபியிடம் வராத வழக்குகள் இன்னும் எத்தனை எத்தனை கோடிகளோ இருக்கலாம்.
இங்குதான் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான வித்தியாசம் உள்ளது. பொதுமக்களை பாதிக்கும் எந்த விஷயத்திலும் அமெரிக்கா தெளிவான சட்டங்களைக் கொண்டுள்ளது. திறமையான புலனாய்வு அமைப்புகளைக் களத்தில் இறக்குகிறது. நல்ல வக்கீல்களைக் கொண்டு நீதிமன்றத்தில் வாதாடுகிறது. ரஜத் குப்தா வழக்கைக் கையாண்டவரும் ஓர் இந்தியர்தான். மன்ஹாட்டன் மாவட்ட அரசு வழக்கறிஞர் பிரீத் பராரா என்பவர். நீதிமன்றங்களும் உடனடியாக வழக்கை விசாரித்துத் தீர்ப்பு சொல்கிறார்கள். மக்களுக்கு நீதியின்மீது நம்பிக்கை வருகிறது.
இது எதுவுமே இந்தியாவில் நடப்பதில்லை. இது உடனடியாகச் செயல்படுத்துவதில்தான் நம் எதிர்காலமே அடங்கியுள்ளது.